தி.மலையில் சோகம்! மின் கம்பத்தில் ஏறிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழும் காட்சி.!
கடந்த 6-ம் தேதி திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மின்இணைப்பில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முனியப்பன் மற்றும் 2 ஊழியர்கள் சென்றிருந்தனர். மின்கம்பத்தில் ஏறி முனியப்பன் பழுதை சரிசெய்துக் கொண்டிருந்தார்.
திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனையில் பழுது நீக்க மின் கம்பத்தில் ஏறிய ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் முனியப்பன் (27). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மின்இணைப்பில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முனியப்பன் மற்றும் 2 ஊழியர்கள் சென்றிருந்தனர். மின்கம்பத்தில் ஏறி முனியப்பன் பழுதை சரிசெய்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த முனியப்பன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முனியப்பன் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்த போது தனியார் மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் ஒயரில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து முனியப்பன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. முனியப்பன் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.