'ஈமச்சடங்குகள் வேண்டாம்.. உடலை தானமாக கொடுத்திருங்க'..! தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய பிள்ளைகள்..!
திருவண்ணாமலை அருகே பெற்றோரின் உடல்களை தானமாக வழங்கி அவர்களை விருப்பத்தை பிள்ளைகள் நிறைவேற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் கோபால்(73). இவரது மனைவி கோதை. கோபால் அங்கு இருக்கும் கூட்டுறவு நிலவள வங்கியில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ராம்குமார், லட்சுமண குமார் என்று இரு மகன்களும் சுமதி என்று ஒரு மகளும் இருக்கின்றனர். கோபாலின் மனைவி கோதை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.
கணவன் மனைவி இருவரும் உயிருடன் வாழும் போதே தாங்கள் இறந்த பிறகு தங்கள் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகளிடம் கூறியிருந்தனர். அதன்படி கோதை இறந்த பிறகு அவரது உடல் தானமாக மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டிருந்தது. மனைவி இறந்த பிறகு கோபால் தனது மகன்களுடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கோபால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் கோபால் மரணமடைந்தார். இதையடுத்து தாயாரின் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கியது போல தந்தையின் உடலையும் மருத்துவமனைக்கு கொண்டுசென்று தானமாக வழங்க மகன்கள் ஏற்பாடு செய்தனர். உறவினர்களின் உதவியுடன் கோபாலின் உடல் தானமாக வழங்கப்பட்டது. தாய் தந்தை இருவரின் ஆசைப்படி அவர்கள் இறந்த பிறகு உடலை பிள்ளைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கியதை அனைவரும் பெரிதும் பாராட்டினர்.