ஆரணியில் மீண்டும் அதிர்ச்சி..திமுக பிரமுகரின் ஓட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீர் உயிரிழப்பு
திருமுருகன் என்பவர் தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24ந் தேதி நண்பர்களுடன் ஆரணி டவுன் காந்தி ரோட்டில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற ஹோட்டலில் நண்பர்களுடன் அசைவ உணவு சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.
ஆரணியில் தனியார் ஹோட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஆப்பிள் ஸ்கூல் உரிமையாளர் கணேஷ் (எ) ஆப்பிள் கணேஷ். அவருக்கு திருமுருகன், கோகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் திருமுருகன் என்பவர் தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24ந் தேதி நண்பர்களுடன் ஆரணி டவுன் காந்தி ரோட்டில் உள்ள 5 ஸ்டார் எலைட் என்ற ஹோட்டலில் நண்பர்களுடன் அசைவ உணவு சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த மாணவனுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த மாணவனை சிகிச்சைக்காக ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது புட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மகனை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்படி இருந்த போதிலும் வயிற்று வலி குறையவில்லை.
திருமுருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனால், உடனடியாக திருமுருகனை வேலூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மாணவன் திருமுருகன் பாதி வழியிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மாணவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், திமுக பிரமுகர்கள் சிலர் அழுத்தம் கொடுத்ததால் மகனின் உடலை எரித்துவிட்டு, இறுதி சடங்கு செய்தேன். எனது மகன் இறப்பதற்கு அந்த ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட அசைவ உணவு மற்றும் தந்தூரி சிக்கன் தான் காரணம். எனவே, 5 ஸ்டார் எலிட் என்ற ஓட்டல் நிறுவனம் திமுக முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஏ.அன்சர்பாஷாவுக்கு சொந்தமானது. அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து, உரிமையாளரை கைது செய்ய வேண்டும். நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.