நிவர் புயல் காரணமாக  திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியளிக்கையில்;- நிவர்' புயல் சென்னையில் இருந்து 450 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே, புயல் கரையை கடக்கும். புயல் காரணமாக வரும் 27ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 25ம் தேதி கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களில் கனமழை பெய்ய வாயப்பு உள்ளது. காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் அதீத கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

நாளை புயல் கரையை கடக்கும்போது, புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அதீத கனமழையும், பிற மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ., வேகத்திலும், சில சமயங்களில் 120 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில், மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்திலும், சமயங்களில் 100 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 9 செ.மீ., எம்ஜிஆர் நகர், வடசென்னையில் தலா 8 செ.மீ., விமான நிலையம், ஆலந்தூரில் 7 செ.மீ. கேளம்பாக்கத்தில் 6 செ.மீ., கொளப்பாக்கத்தில் 5 செ.மீ., வெரம்பூர், தரமணி 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தமிழக கடற்கரை ஒட்டிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.