தமிழ்நாட்டில் இருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. சாமியாரான இவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் அமைத்து உள்ளார். பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும் இவரிடம் பல இளம்பெண்கள் சீடர்களாக இருக்கிறார்கள். இவரது ஆசிரமம் மீது தொடர்ச்சியாக குற்றசாட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அவ்வப்போது சில காணொளிகளை வெளியிட்டு சர்சைககளுக்கு வித்திட்டு வருகிறார்.

இதனிடையே தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சில மத தலைவர்கள் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாகவும், அவர்களிடம் தனது பக்தர்கள் பூ, பழங்களுடன் சென்று உண்மையை எடுத்துக்கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தன் மீது மதத்தலைவர்கள் வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறிய அவர், முன்பு தான் பரமஹம்ச நித்தியானந்தாவாக இருந்தாகவும், தற்போது நித்தியானந்த பரமசிவமாக மாறி விட்டதாகவும் வேடிக்கையாக கூறியிருக்கிறார்.

பத்திரிகையாளர்களை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நித்யானந்தா தமிழ் பத்திரிகையாளர்கள் வதந்தியை கூட ருசியாக எழுதுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். தன்னை நெருப்பாற்றில் நீந்தி கடக்கிறார் என்று சிலர் கூறுவதாகவும் ஆனால் அந்த நெருப்பாறே தாம் தான் என்று நித்யானந்தா காணொளியில் பேசியிருக்கிறார். மேலும் செய்தியாளர்கள் தனக்கு பல பெயர்கள் வைத்திருப்பதாக கூறியிருக்கும் நித்தியானந்தா சிறுவயதில் தனக்கு 'சுமார் சாமி' என்று அவர்கள் பெயர் வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

எதையும் தாங்கும் இதயம் கொண்டுள்ளதாகவும் அனைத்து தாக்குதலையும் தாண்டி நிலையாக நிலைத்து நிற்பேன் எனவும் நித்யானந்த சாமியார் தனது காணொளியில் கூறியுள்ளார்.