திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கும் நடுகாட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியினரின் இரண்டு வயது மகன் சுர்ஜித். கடந்த வாரம் வீட்டின் அருகே இருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். 80 மணி நேரம் நடைபெற்ற மீட்பணிகளின் இறுதியில் சுர்ஜித் சடலமாக தான் மீட்கப்பட்டிருந்தான். இந்த நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இரண்டு வயது குழந்தைக்கு நிகழ்ந்த இந்த கொடூரமான மரணம் எல்லோர் மனதிலும் நீங்கா வடுவாக இருக்கிறது.

சுர்ஜித்தின் மரணத்தை தொடர்ந்து பயனற்று இருக்கும் ஆழ்துளைக்கிணறுகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் ஆழ்துளைக்கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து ஆழ்துளைக்கிணறுகளை மூடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தொண்டு நிறுவனங்களும் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக்கிணறுகளை மூட உதவி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலையில் இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் இருந்த ஆழ்துளைக்கிணறு மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றப்பட்டது. அதன் அருகே ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை சுர்ஜித் நினைவாக கல்வெட்டும் திறக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தென் அரசம்பட்டு கிராமத்தில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளியில் நடந்த இந்நிகழ்வில் கல்வெட்டையும், சுர்ஜித்தின் உருவப்படத்தையும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திறந்து வைத்தார். கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள் அனைவரையும் உருக்குவதாக இருந்தது.

அதில், 'நான் சுஜித் பேசுகிறேன். நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், எனது தாயின் கருவறையில் பிறந்து இரண்டு வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும் என்னை போல் 80 மணி நேரம், மரணத்துடன் போராடிய அந்த தருணம் மிகவும் கொடுமையானது. நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனி வரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்து வைக்காமல் என்னைபோல் உள்ள குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்' என்று எழுதப்பட்டிருந்தது.

அதன்கீழ், '31.10.2019 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த 5804 ஆழ்துளைக்கிணறுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் துறை மற்றும் காவல்துறை மூலமாக மூடப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மதராஸ் மனதே'வை வீழ்த்தி தலைநகரை மீட்ட தமிழர்கள்..! தமிழ்நாடு நாள் விழாவில் மீண்டெழும் வரலாறு..!