1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மாயம்..! வங்கியின் முன் குவிந்த வாடிக்கையாளர்கள்..!
திருவண்ணாமலையில் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதி தெருவில் கரூர் வைஸ்யா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பல தரப்பினரும் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். பலர் தங்கள் நகைகளையும் அடமானம் வைத்துள்ளனர். வங்கியில் மாதத்திற்கு இருமுறை அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், கடந்த வாரம் அடகு வைத்த நகையை மீட்க ஒருவர் வந்தபோது, அவரது நகை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தொடர்ந்து மற்ற நகைகள் குறித்தும் ஆய்வு செய்தபோது ரூ. 1.50 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது தெரியவந்துள்ளது. 42 வாடிக்கையாளர்களின் நகைகளான அவை சுமார் 750 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வங்கி மேலாளர் சுரேஷ், நகை மதிப்பீட்டாளர்களான கார்த்தி, மணி உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் ரகசியமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த நகை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கியின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.