Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலை ராணுவ வீரர் குடும்பத்துக்கு பாதுகாப்பு: மாவட்ட எஸ்.பி. விளக்கம்!

ராணுவ வீரர் பிரபாகர் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

Indian army soldier Prabakar family has been given police protection says tiruvannamalai sp karthikeyan
Author
First Published Jun 11, 2023, 3:58 PM IST

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபாகர் என்பவர், இடப்பிரச்சினை காரணமாக தனது மனைவி மீது தாக்குதல் நடந்திருப்பதாக கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அம்மாவட்ட காவல்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபாகர் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ராணுவ வீரர் பிரபாகர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவைக் கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குத்தகைக்கு கடை விட்டதுதொடர்பாக அவரது குடும்பம் ராமு என்பவரது குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. நேற்று இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: “சமூக வலைதளங்களில் பிரபாகரன் என்ற ராணுவ வீரர் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமத்தில் கீர்த்தி என்ற தனது மனைவியை கடை காலி செய்வதில் உள்ள பிரச்சனை காரணமாக சிலர் அடித்து மானபங்கம் செய்ததாக பேசும் வீடியோ குறித்து விசாரணை செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமம் ரேணுகாம்பாள் கோவில் அருகே ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குன்னத்துர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டிடம் கட்டி படவேடு கிராமத்தைச் சார்ந்த செல்வமூர்த்தி என்பவருக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9.50 லட்சம் பெற்றுக்கொண்டு மாதம் ரூ.3000க்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

 

 

இந்நிலையில், கடந்த ஆண்டு குமார் இறந்துவிடவே அவரது மகனான ராமு என்பவர் கடையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரி செல்வமூர்த்தியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி செல்வமூர்த்திக்கு ரூ.9.50 லட்சம் ராமு கொடுத்து விடுவது என்றும், அதைப் பெற்றுக்கொண்டு 10.02.2023-ந் தேதியன்று செல்வமூர்த்தி கடையை காலி செய்வதென்றும் இருவருக்கும் எழுத்து மூலமாக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

 

 

அதன்பின்னர், செல்வமூர்த்தி ஒப்பந்தப்படி பணத்தையும் பெற்றுக் கொள்ளாமலும், கடையையும் காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார். ராமு பலமுறை முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே நேற்று காலை சுமார் 10 மணிக்கு ராமும் அவரது குடும்பத்தினரும் மேற்படி கடையிடம் சென்று செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோரிடம் பணத்தை கொடுத்து கடையை காலி செய்யக் கூறியபோது செல்வமூர்த்தியின் மகன் ஜீவா என்பவர் கத்தியால் ராமுவின் தலையில் தாக்கியுள்ளார்.

அப்போது ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவியும் மேற்படி செல்வமூர்த்தியின் மகளுமான கீர்த்தி மற்றும் அவரது தாயாரும் இருந்துள்ளனர். ராமுவிற்கு ஏற்பட்ட இந்த காயத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ராமுவிற்கு ஆதரவாக ஓடிவந்து ஒப்பந்தப்படி கடையையும் காலி செய்ய மறுத்துள்ளீர்கள், கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள் என்று ஆவேசப்பட்டு கடையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள்.

மேலும் பொதுமக்கள் ஆவேசப்பட்டு பொருட்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. மேலும் இந்த விஷயம் முற்றிலும் மிகைப்படுத்தி கூறியுள்ள தகவல் என தெரியவருகிறது. இருப்பினும், இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios