மனைவியுடன் கள்ளக்காதல்... நள்ளிரவில் விஏஓ வீட்டுக்கு சென்று ஆசிட் வீசிய போலீஸ்..!
திருவண்ணாமலையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கிராம நிர்வாக அலுவலர் மீது போலீஸ்காரர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கிராம நிர்வாக அலுவலர் மீது போலீஸ்காரர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் உண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபால் (42), காவல் துறையில் ‘கியூ’ பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி ஞானசுந்தரி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீபாலின் மாமியார் விமலா, வெறையூர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், ஸ்ரீபால் குடும்பத்தினருடன் சேர்ந்து வசித்து வருகிறார்.பணியின் காரணமாக, சிவகுமார், விமலாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது, அங்கிருந்த ஸ்ரீபால் மனைவி ஞானசுந்தரிக்கும், சிவக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து அறிந்த ஸ்ரீபால், சிவக்குமாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. இதனால் ஸ்ரீபாலுக்கும், சிவக்குமாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிவக்குமார் குடிபோதையில் ஸ்ரீபாலின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து உள்ளார். அப்போது வீட்டில் ஸ்ரீபாலின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த ஸ்ரீபால் சம்பவம் பற்றி அறிந்து ஆத்திரம் அடைந்தார். அதைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில் ஸ்ரீபாலுவும், அவரது மாமியார் விமலாவும் சிவக்குமாரின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அங்கு ஸ்ரீபாலுக்கும், சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீபால் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை திடீரென எடுத்து சிவக்குமார் மீது ஊற்றியுள்ளார். அந்த ஆசிட் அவர் மீது பட்டு தெறித்ததில் ஸ்ரீபால் முகத்திலும் பட்டு உள்ளது. இதில் இருவருக்கும் உடல் வெந்து காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீபால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், சிவாக்குமார் சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார் மீது கள்ளக்காதல் தகராறு தொடர்பான வழக்கு ஏற்கனவே வேட்டவலம் போலீசில் உள்ளது. இந்நிலையில், ஆசிட் வீச்சில் விஏஓ சிவக்குமாரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.