திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும் 30-ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 315 மையங்கள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், திருவண்ணாமலை டவுன் புதுகார்கானா தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் (58). காவல் ஆய்வாளரான இவர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தார். துரிஞ்சாபுரம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு கலைக்கல்லூரியில் நடந்து வருகிறது.

இந்த மையத்தில் நேற்று இரவு முருகதாஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே முருகதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.