திருவண்ணாமலையில் பயங்கரம்.. அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பணிகள்..!
திருவண்ணாமலையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பேருந்து நடத்துனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பேருந்து நடத்துனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழக அரசு உத்தரவுப்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மண்டலத்திற்குள் 50 சதவீத பேருந்துகளை இயக்கலாம் என்று நேற்று முன்தினம் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு அரசு பேருந்து ஒன்று கடலூருக்கு புறப்பட்டு சென்றது. பேருந்தை திருவண்ணாமலை அடுத்த கரிக்கலாம்பாடியை சேர்ந்த ஓட்டுநர் ஓட்டி சென்றார்.
கரிக்கலாம்பாடி கிராமத்தில் ஏற்கனவே 5 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானதால் அந்த கிராமம் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் அனைவருக்கும் 4 நாட்களுக்கு முன்பு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், அரசு பேருந்து ஓட்டுநரும் தனது சளி, ரத்த மாதிரியை பரிசோதனைக்காக வழங்கியுள்ளார். இந்த தகவலை அவர் பணிமனை மேலாளருக்கு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவர் பயணிகளுடன் திருவண்ணாமலை திரும்பியுள்ளார். அப்போது அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், பேருந்து நடத்துனரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, பேருந்தில் பயணம் செய்தவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, திருவண்ணாமலையில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 439-ஆக அதிகரித்துள்ளது.