அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்.. 4 பேர் உடல்நசுங்கி பலி.. ஒருவர் படுகாயம்..!
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (32), சங்கர் (35). ஆனந்தன் (45), சிவராமன் (32) பிரகாஷ் (37) உள்ளிட்ட 5 பேர் ஊர் திருவிழாவை முன்னிட்டு சேத்துப்பட்டுக்கு காரில் வந்து பட்டாசுகள் வாங்கிக் கொண்டு நேற்று இரவு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
சேத்துப்பட்டு அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (32), சங்கர் (35). ஆனந்தன் (45), சிவராமன் (32) பிரகாஷ் (37) உள்ளிட்ட 5 பேர் ஊர் திருவிழாவை முன்னிட்டு சேத்துப்பட்டுக்கு காரில் வந்து பட்டாசுகள் வாங்கிக் கொண்டு நேற்று இரவு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது போளூரில் இருந்து சென்னைக்கு சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து மீது எதிர்பாராத விதமாக கார் நேருக்கு நேர் மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வடிவேல், சங்கர், ஆனந்தன், சிவராமன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் பிரகாஷ்(37) என்பவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த பிரகாஷை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.