திருவண்ணாமலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் அதிரடியாக தடை விதித்துள்ளார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 7ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி 8ம் தேதி காலை 8.05 மணிக்கு நிறைவடைகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. எனவே பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் பௌர்ணமி கிரிவலம் வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத நிலை இந்த மாதம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் கூறுகையில் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவார். ஆனால், தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பக்தர்கள் கிரிவலம் வர முடியாது. எனவே, இந்த மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறாது. ஆனால் வழக்கம்போல் அண்ணாமலையார் கோயில் காலை 6 கால பூஜையும், பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெறும்  என்று தெரிவித்துள்ளார்.