திருவண்ணாமலையில் மேம்பால பணியின் போது மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் சிறுவன் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

திருவண்ணாமலையில்- திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களா நடைபெற்று வருகிறது. தற்போது தாலுகா அலுவலகம் அருகே தூண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. அங்குள்ள ஹைமாஸ் விளக்கின் அடிபகுதியில் கொடுக்கபட்ட மின் இணைப்பு மூடி வைக்கவில்லை. அதன் அருகில் உள்ள தியாகி அண்ணாமலை தெருவில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரகுநாதன் (8). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன் ரகுநாத் மேம்பால பணி நடந்து வரும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அருகே மணல் குவியலில் விளையாடிக் கொண்டிருந்தான். 

அப்போது, மின்சாரம் தாக்கி சிறுவன் ரகுநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர், ஆத்திரமடைந்த பெற்றோர் மின்கம்பிகளை அகற்றாத அதிகாரிகளின் அலட்சியத்தாலும், மெத்தனப் போக்காலும் சிறுவன் உயிரிழந்ததாக கூறி பெரியார் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தாசில்தார் அமுல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை திரும்ப பெற்றனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.