பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் விதவித அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருநாள் டிசம்பர் 10ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை காணப்பதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு டிசம்பர் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டிருக்கிறார். அன்றைய தினம் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி,கல்லூரி, அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை என்றும் அதற்கு பதிலாக டிசம்பர் 21ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திருவிழா தொடங்கி 10 நாட்களுக்கு சுங்கவரி கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.