ஆரணி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதுகாமூர் பகுதி உள்ளது. கமண்டல நாகநதி பகுதியையொட்டி உள்ள இங்கு பூ வியாபாரம் செய்யும் முத்தாபாய் என்பவர் வீட்டில் இன்று காலை எரிவாயு சிலிண்டர் ஒன்று அதிக சத்தத்துடன் வெடித்தது. சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் வீட்டில் இருந்த 8 வயது குழந்தைகள் உட்பட 8 பேர் சிக்கிக்கொண்டனர்.

இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் 8 வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.