திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள மளிகைக்கடையில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஆரணியில் இன்றிலிருந்து 3 நாட்களுக்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

திருவண்ணாமலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயிரத்தை கடந்ததால் மாவட்ட நிர்வாகம் இந்த தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களுக்களிடையே சமூக இடைவெளி குறித்தும் முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் வைரஸ் பாதிப்பானது முந்தைய நாட்களை விட தற்போது அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,624 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஆரணியில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் ஆரணி லிங்கப்பன் தெருவில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆரணியில் உள்ள வியாபாரிகள் அனைவரும் பீதி அடைந்தனர்.

இதையடுத்து நேற்று ஆரணி டி.எஸ்.பி.யிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் ஆரணி சிறு, குறு வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 3 சங்கங்களும் ஒருங்கிணைந்து, இன்றையிலிருந்து அதாவது, 29, 30, 1 ஆகிய மூன்று நாட்களுக்கு தாமாக முன்வந்து அனைத்து வியாபாரிகளும் கடையடைப்பு செய்வதாக உத்தரவாதம் அளித்தனர். அதன்படி இன்று காலையிலிருந்து ஆரணியில் மருந்தகங்கள், பால்கடை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.