துணிப்பை, சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் வெள்ளி பரிசு... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழாம் திருநாளான இன்று விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், அண்ணாமலையார் தேர், அம்மன் தேர், சண்டிகேசுவரர் தேர் என்கிற மகாரதம் வீதியுலா நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழாம் திருநாளான இன்று விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், அண்ணாமலையார் தேர், அம்மன் தேர், சண்டிகேசுவரர் தேர் என்கிற மகாரதம் வீதியுலா நடைபெற உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 10-ம் தேதி மகா தீபமும், 11-ம் தேதி கார்த்திகை பௌர்ணமியையொட்டி கிரிவலமும் நடைபெறுகிறது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், திருவண்ணாமலை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையில் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். அதனை ஊக்குவிக்கும் வகையில் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். பின்னர் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படும் 12 பக்தர்களுக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்றும், அதேபோல 72 பக்தர்களுக்கு பத்து கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் மகா தீபம், பரணி தீப தரிசன சீட்டுகள் இன்று காலை ஆன்லைன் மூலம் விற்பனை தொடங்கியது. பரணி தீப தரிசனத்திற்கு ரூ.500 கட்டணமும், மகா தீபதரிசனத்திற்கு ரூ.600 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தன்று மலை மீது செல்ல 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.