திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொழித்து போனதால் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அவ்வப்போது மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்து வந்தது. சென்னை, வேலூர் உள்பட வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதன் பிறகு மழை இல்லை. 

இந்நிலையில், மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார். 

வருகிற 20-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.  கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 8 செ.மீ., திருத்தணியில் 6 செ.மீ., வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 5 செ.மீ., தர்மபுரி மாவட்டத்திலும் வேலூர் காவேரிப்பாக்கத்திலும் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.