சிட்டிசன் பட பாணியில் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படும் கிராமம்; அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆதங்கம்
திருப்பூர் மாவட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படும் தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியில் உள்ளது செந்தில் நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளை உள்ளடக்கிய செந்தில் நகர் பகுதிக்கு குடிநீர், சாக்கடை, பேருந்து வசதி, பொதுக்களிப்பிடம், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது.
இரண்டு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் செந்தில் நகர் பகுதியில் காட்சி மட்டும் இன்றளவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், நாள்தோறும் இப்பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கும், வேலைக்காகவும் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பேருந்து வசதி இல்லாமல் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வரை நடந்தே செல்லும் நிலையும் இப்பகுதியில் காணப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் நலக்குறைவு ஏற்படும் போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தாழ்வான பகுதியில் செந்தில் நகர் கிராமம் அமைந்திருப்பதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து சேறும் சகதியுமாகவும், குண்டம் குழியுமாக வீதிகள் காணப்படுவதால் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வர மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு தொடரும் கன மழை... 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அவரச கடிதம்
மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சிட்டிசன் சினிமா பட பாணியில் செந்தில் நகர் கிராமம் வருவாய்த்துறையினராலும், ஊராட்சி நிர்வாகத்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தங்களது பகுதியில் போர்க்கால அடிப்படையில் வசதிகளை செய்து தர வலியுறுத்தி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தும் பல்லடம் வட்டாட்சியர் முதல் மாதப்பூர் ஊராட்சி நிர்வாகம் வரை கோரிக்கை வைத்தும் தொடர்ந்து அதிகாரிகளால் இப்பகுதி புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். அப்பகுதி மக்கள் இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தங்களது குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அப்பகுதியினர் அறிவித்துள்ளனர்.