திருப்பூர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிமுக கோஸ்டி பூசலால் கொங்கு மண்டலத்தில் நாடாளுமன்றத்  தேர்தலைப் பாதிக்கும் என்ற அச்சத்தில் அதிமுக தலைமை உள்ளது.


திருப்பூர்  புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்துவந்த உடுமலை ராதாகிருஷ்ணனை, அந்தப் பதவிலிருந்து தூக்கிவிட்டு, துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனை ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்தார்கள். அதேவேளையில் ராதாகிருஷ்ணன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருக்கிறார். ராதாகிருஷ்ணனின் இந்தப் பதவி பறிப்பு திருப்பூரில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கூடிய ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள்.
அந்த மனுவில், ‘ராதாகிருஷ்ணனை மீண்டும் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும். மாவட்டத்துக்கு தொடர்பே இல்லாத பொள்ளாச்சி ஜெயராமனை மாவட்ட செயலாளர்  பதவிக்கு நியமித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர்.  ஆனால், மனுவை வாங்கி வைத்துக்கொண்ட கட்சி  தலைமை, எந்த மறு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
 இந்நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட செயலாளராக நியமிக்கவிட்ட நிலையில், அவர் பணியாற்றத் தொடங்கிவிட்டார். திருப்பூர் புறநகர் பகுதியில் ஒன்றிய  செயலாளர்களை அழைத்து தனித்தனியாகப் பேசி ஆதரவு திரட்டிவருகிறார். ஆனால், ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள்  மட்டும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இதுபற்றி ராதாகிருஷ்ணனின்  ஆதரவாளர்கள் கூறும்போது, “கோவையில் பொள்ளாச்சி ஜெயராமன் வீடு உள்ளது. அவரை திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு நியமிப்பது என்ன நியாயம்? உள்ளூர் கட்சிக்காரர்கள் இருக்கும்போது வெளிமாவட்டக்காரருக்கு ஏன் பதவி வழங்க வேண்டும். இது எந்த எவ்விதத்திலும்  ஏற்புடையது அல்ல. தொண்டர்கள் யாருமே விரும்பாதவரை செயலாளர் பதவியில் உட்கார வைத்து, ஒத்துழைப்பு கேட்டால் எப்படிக் கொடுப்பார்கள்” என்று கடுகடுத்தார்கள்.
திருப்பூரில் ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் காட்டிவரும் எதிர்ப்பால் அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. கொங்கு பகுதியில் அதிமுக பலமாக இருந்துவருகிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதிமுகவுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேளையில் வாய்ப்புள்ள திருப்பூரில் நடக்கும் உட்கட்சி பூசல் தேர்தல் வெற்றியைக் கேள்விக்குறி ஆக்குமோ என்ற அச்சத்தில் அதிமுக தலைமை உள்ளது.