திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இருக்கிறது சிவன்மலை. இங்கு அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் தனிச்சிறப்பாக உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது. அதில் இறைவன் உத்தரவின் படி குறிப்பிட்ட பொருள் ஒன்று வைக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது,'இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியசாமி பக்தர்களின் கனவில் தோன்றி என்ன பொருள் வைக்க வேண்டும் என கூறிய பின் அதை உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாத்திடம் தெரிவிப்பார்.

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஐம்பொன் வேல் வைத்து பூஜை

நிர்வாகத்தின் சார்பாக சுவாமியிடம் பூ போட்டு கேட்டு வெள்ளை பூ வந்தால் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்' என்கின்றனர். அவ்வாறு இறைவன் உத்தரவுபடி வைக்கப்படும் பொருள் இருக்கும் காலத்தில் அப்பொருள் சமூகத்தில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதன்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையதைச் சேர்ந்த காமராஜ்(46) என்ற பக்தரின் கனவில் மஞ்சள் திருமாங்கல்யம் உத்தரவு பொருளாக வந்ததையடுத்து கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் தாலிக்கயிற்றில் மஞ்சள் கட்டையால் ஆன திருமாங்கல்யம் வைத்து பூஜிக்கப்படுகிறது.

திருமாங்கல்யம் வைக்கப்பட்டிருப்பதால் நாட்டில் சுப காரியங்கள் நடைபெறும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்தநிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனா,இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்கா, இந்தியா என உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி இதுவரை 11 ஆயிரத்திற்கு அதிகமான உயிர்களை பறித்துள்ளது. ஒட்டுமொத்த உலகமும் கொரோனா நோயால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. உயிர் பலி ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் அதை தடுக்கும் விதமாக உணவில் தவறாமல் மஞ்சள் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் கடைகளில் மஞ்சள் தூள் விற்பனை அதிகரித்துள்ளது. மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து கிருமிநாசினியாக கைகழுவவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தும் கொரோனவிற்கு தடுப்பு மருந்தாக மஞ்சளை மருத்துவர்கள் கூறுவதும் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தற்போது மஞ்சள் வைக்கப்பட்டிருப்பதும் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலை சிவன்மலை ஆண்டவன் முன்கூட்டியே உணர்த்தி இருப்பதாக நம்பும் பக்தர்கள் அதன்படி சமையலுக்கு அதிக மஞ்சளை பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.