பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா..! கோவையில் அதிர்ச்சி..!
தமிழகத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 17,265 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 543 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4ம் இடம் வகிக்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழ் நாட்டில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
பல மாநிலங்களில் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அவ்வாறு தமிழகத்திலும் தற்போது பச்சிளம் குழந்தை ஒன்றிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் சிறுமுகையிலும் நேற்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையும் அடங்கியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் அப்பெண்ணை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தாயிடம் இருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது. பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா நோய் வந்திருப்பது மருத்துவர்களையே கலங்கச் செய்தது. குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அளித்து வருகின்றனர்.