பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகரை  கைது செய்த போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கருத்தப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் சார்லஸ் (31). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி எதிரான விமர்சனங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். 

இந்நிலையில், சார்லஸ் அவரது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடியின் 2 கைகளையும் வெட்டுவேன் பிறகு ஒரு காலையும் வெட்டுவேன் பிறகு அண்ணன் சீமானின் அரசியல் முறைப்படி ஆட்சி நடக்கும் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் நகர பாஜக தலைவர் ஹரிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, திருப்பூரில் வைத்து சார்லசை போலீசார் கைது செய்தனர். இவர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.