திருப்பூர் அருகே இன்று காலை நின்றிக்கொண்டிருந்த லாரி மீது மோதி ஒரே இரு சக்கர வாகனத்தில் பயணித்த 4 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி செட்டிப்பாளையம் மற்றும் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் (23), சபரி (25), ஆனந்த் (26), குட்டி (24). நண்பர்களான இவர்கள் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இன்று அதிகாலை பணி முடிந்து 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டனர்.  அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் டைல்ஸ் பவுடர் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி பஞ்சராகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வேகமாகச் சென்று லாரியின் பின்பக்கத்தில் இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. 

இதில், 4 பேரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே சபரி பாலமுருகன், ஆனந்த் உயிரிழந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த பாலமுருகன், பிரவீன் ஆகியோரைப் பொதுமக்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேரும் சென்றதால் நிலைதடுமாறி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.