குடிகார கணவரால் சிதைந்த குடும்பம்; 4 வயது மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தொடர்ந்து குடித்துவிட்டு தகராறு செய்துவந்த கணவனால் மனமுடைந்த பெண் தனது மகனுக்கு எலி மருந்தை சாப்பிட கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கன்னிவாடி மேற்குத் தெருவில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் கூலித் தொழிலாளி ஜோதிபாசு. இவரது மனைவி நேசவள்ளி (வயது 31). இவர்களது மகன் திலக் கலாம் (04) நேசவள்ளியின் தாய் தமிழரசியும் (52) இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
காலையில் நீண்ட நேரமாகியும் நேசவள்ளி கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியன் சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர் மூலனூர் காவல் துறையினருக்கும், கிராம நிர்வாக அலுவலரான உதயகுமாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நேசவள்ளியின் மகன் திலக்கலாம்(4) வீட்டுத் திண்ணையிலும், நேசவள்ளி முன்பக்க அறையில் தூக்கிட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர். அவரது தாய் தமிழரசி உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தார்.
’இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது’ - அண்ணாமலை காட்டம்
இதையடுத்து, அவரை மீட்ட காவல் துறையினர் ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தமிழரசியிடம் விசாரித்ததில், "பழனி ராம் நகர் சொந்த ஊர். 5 ஆண்டுகளுக்கு முன் மகள் நேசவள்ளியை செங்காளிவலசைச் சேர்ந்த ஜோதிபாசுவுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். இந்நிலையில், தனது மருமகன் ஜோதிபாசு குடித்துவிட்டு நாள்தோறும் தனது மகளுடன் சண்டையிட்டு வந்தததால், கடந்த 3 மாதங்களுக்கு முன் கன்னிவாடி மேற்குத் தெருவில் சுப்பிரமணியன் வீட்டுக்கு பேரனுடன் நானும், மகளும் குடிவந்தோம். கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வீட்டைக் காலி செய்யுமாறு அவர் வற்புறுத்தி வந்தார்.
இதனால், எங்கு செல்வது என்ற மன உளைச்சலில் இருந்த மகளும், நானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்து செவ்வாய்க்கிழமை இரவு பேரன் திலக் கலாமுக்கு எலி மருந்து மற்றும் தூக்க மாத்திரை கொடுத்தோம். பின்னர் நானும், மகள் நேசவள்ளியும் எலி மருந்தை சாப்பிட்டதால் நான் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டேன். காலையில்தான் மகள் நேசவள்ளி முன்புற அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதும், பேரன் திலக் கலாம் உயிரிழந்ததும் தெரியவந்தது என்றார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த மூலனூர் காவல் துறையினர் நேசவள்ளியின் கணவர் ஜோதிபாசு, வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.