ஈரோட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்ட பெண் மற்றும் தொட்டிலில் இறந்து கிடந்த குழந்தையின் மரணத்தில் திடீர் திருப்பமாக கணவர் இருவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, காந்திநகரை சேர்ந்தவர் கவின் பிரசாத் (32). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமராவதி (28). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரா என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம் போல் வேலை முடிந்து கவின் பிரசாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் தூங்க சென்றனர்.

மனைவி தற்கொலை

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கணவர் எழுந்து பார்த்த போது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கணவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்களின் உதவியுடன் அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாிசோதனை செய்த மருத்துவர்கள் அமராவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இருவரின் உடலை மீட்ட போலீஸ்

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கவின் பிரசாத் கதறி அழுதார். இதனிடையே குழந்தையின் ஞாபகம் வந்து பார்த்த போது தொட்டிலில் குழந்தையும் அசைவற்று இருப்பதை கண்டனர். உடனே குழந்தையையும் அதே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் திடீர் திருப்பம்

இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் அமராவதி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது. இந்நிலையில், திடீர் திருப்பமாக அமராவதி கணவர் கவின் பிரசாத் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடத்தையில் சந்தேகம்

 இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மனைவி அமராவதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.