கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு; தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்
கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகை பெற தமிழக அரசு சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கு இந்து முன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகை வழங்க சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இடஒதுக்கீடு குறித்து தெளிவான கண்ணோட்டத்தை அம்பேத்கர் தந்துள்ளார். சமூக நீதிக்கான சலுகையை பெற மதமாற தூண்டும் சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கையாக உள்ளது. தமிழக அரசின் தவறான போக்கை கண்டித்து பட்டியலின சமூக மக்களும், அமைப்புகளும் முன்வர இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது.
சட்டரீதியாகவும், பொதுமக்களின் கருத்துகளை திரட்டி ஜனநாயக ரீதியில் போராடியும் இந்து முன்னணி, மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு அரசு கொண்டு வரும் மசோதாவை முறியடிக்க தயங்காது” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.