திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றிய 22 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவே அம்மாவட்டத்தில் கொரோனா முதல் உயிரிழப்பாகும். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், திருப்பூர் மாவட்டம் மங்களம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றி வந்தார்.  கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் காரணமாக ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பாக அமைந்துள்ளது. இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் முதல் கொரோனா உயிரிழப்பாகவும் பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.