நடத்துநர்கள் பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்கள் பெறக்கூடாது என திருப்பூர் போக்குவரத்து பணிமனை அனுப்பிய சுற்றிக்கையை திரும்ப பெற்றப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு, 2016-ம் ஆண்டு ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு சட்டத்தைக் கொண்டு வந்ததையடுத்து, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து, 10 ரூபாய் நாணயங்களும் இனி செல்லாது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதனால், அரசுப் பேருந்துகள் தொடங்கி அரசின் அனைத்துத்துறைகளும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துவருவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே, புழக்கத்தில் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்றும், நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்தது. அப்படி இருந்த போதிலும் சென்னையில் மட்டுமே 10 ரூபாய் நாணயங்களை வாங்குகிறார்கள். மற்ற இடங்களில் வாங்க மறுக்கிறார்கள். 

இந்நிலையில், திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் நடத்துநர்கள் யாரும் பயணிகள் தரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது சமூகவலைத்தளங்களில் வைரலானது.  

இந்நிலையில், அந்தச் சுற்றறிக்கையை இன்று திருப்பூர் போக்குவரத்து பணிமனை திரும்பப் பெற்றது. இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து பணிமனை மண்டல மேலாளர் தனபால் கூறுகையில் வங்கியில் பணம் செலுத்தும் போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க அவ்வாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டது.  ஆனால், அது பொது மக்களிடம் தவறான கருத்தை பதிவு செய்து அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால், அதனை திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.