தருமபுரி அருகே காரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியவாணி (61). இவரது மகன் கோபிநாத் தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளராக திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றுகிறார். சத்தியவாணி மகனுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். உடல்நிலை பாதிப்பு தொடர்பாக அவர் வேலூர் மாவட்டத்துக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், நேற்று சத்தியவாணி மற்றும் உறவினர்கள் அன்புமணி (58), கவிதா(40) ஆகியோர் வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக காரில் சென்றனர். பின்னர் அவர்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் அதே காரில் திருப்பூருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இந்த காரை ரமேஷ் (40) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று மாலை கார் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னார் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர்ரமேஷ் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஓட்டநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 பெண்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.