கொரோனாவால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் தொல்லையாலும் திருப்பூர் தொழில் அதிபர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியகடை வீதியில் வெங்கட்ராம் செட்டியார்ஸ் தங்கமாளிகை என்ற பெயரில் ஹரிஹரன் (38) நகைக்கடை நடத்தி வருகிறார். அத்துடன் சினிமா தியேட்டர், தானிய மண்டி என்று பல்வேறு தொழிலையும் அவர் செய்து வருகிறார். இந்த நகைக்கடையை  ஓவியா திறந்து வைத்தார். மிகவும் ஆடம்பரமாக திறக்கப்பட்ட நகைக்கடையில் எதிர்பார்த்த வருமானம் இல்லை. 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், நகைச்சீட்டு கட்டியவர்களுக்கு, நகை கொடுக்க முடியாமல் திணறினர். சீட்டு கட்டி ஏமாந்த மக்கள், கடந்த, 18ம் தேதி இரவு, கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தாராபுரம் போலீசார் ஹரிஹரன் மற்றும் அவரது தந்தை பலராமனின் விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாக பலராமன், ஹரி அவமானமடைந்தார். 

இதனையடுத்து, தற்கொலை செய்ய முடிவு எடுத்து திருச்சி, மண்ணச்சநல்லுார் அருகே துடையூர் என்ற இடத்தில், லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.இவர்களது கார் ஓட்டுநர் அய்யப்பன், தனி அறையில் தங்க, மற்ற அனைவரும் பெரிய அறையில் தங்கி உள்ளனர். இதனையடுத்து, மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், விடுதி ஊழியர்கள் துணையுடன், கார் ஓட்டுநர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நகைகளை மெருகூட்ட பயன்படுத்தும் திராவகத்தை குடித்துவிட்டு 5 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். 

உடனே அவர்களை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.