Asianet News TamilAsianet News Tamil

கடனை கட்டாததால் வீட்டு பொருட்களோடு சேர்த்து வீதியில் வீசப்பட்ட முதியவர்; பொதுமக்கள் அதிச்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெற்ற கடனுக்கான ஒரு மாத தவணையை கட்டாத காரணத்தால் தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டு பொருட்களுடன் சேர்ந்து நோய்வாய்ப்பட்ட முதியவரையும் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

An incident in Tirupur where an old man was evicted from his house for non-payment of installments has created a stir
Author
First Published Jul 1, 2023, 1:58 PM IST | Last Updated Jul 1, 2023, 1:58 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூர் காலனியில் கந்தசாமி என்பவர் தனது மனைவி ருக்மணி மற்றும் தனது பேரன்கள் ஆகியோருடன் வசித்து வருகிறார். 75 வயதான கந்தசாமி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு புது வீடு கட்டுவதற்காக அருள்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் தனது பேரன் தினேஷ் குமார் என்பவரின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். 

மாதம் 11 ஆயிரம் ரூபாய் வீதம் இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை தவணைத் தொகையை திருப்பி செலுத்தி உள்ளார். கடந்த மாதம் 10ம் தேதி கட்ட வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் தவணைத் தொகையை குடும்ப சூழல் காரணமாக 20 நாட்கள் தாமதம் ஆன காரணத்தால் செலுத்தாமல் இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கந்தசாமியின் வீட்டிற்கு வந்த தினேஷ் மற்றும் மணி என்ற இருவர் தாங்கள் வங்கியில் இருந்து வருவதாகவும், இந்த மாதம் தவணைத் தொகையை இன்னும் கட்டாததால் உங்கள் வீட்டை பூட்டு போட வந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

தந்தை வாங்கிய கடனுக்காக சிறுமியை கடத்திய நிதி நிறுவன ஊழியர் கைது

மேலும் வீட்டில் உள்ள டிவி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல உள்ளோம் எனவும் தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று கந்தசாமியின் வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டிற்கு பூட்டு போட வேண்டும் எனக் கூறி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே போட்டுவிட்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள 75 வயதான கந்தசாமியை சேரில் அமர வைத்து வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து சாலையில் அமர்த்தி உள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு மாத தவணைத் தொகை கட்டாததற்காக வீட்டுக்கு பூட்டு போடுவீர்களா என கூறி இருவரையும் சிறை பிடித்தனர். மேலும் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் ரௌடிகளைப் போல வயதான நபரை வீட்டிலிருந்து வெளியேற்றி அடுப்பு முதல் அண்டா வரை சாலையில் வீசிய இருவர் மீதும் பல்லடம் காவல்துறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

30 இடங்களில் வெட்டு; தலை துண்டித்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் - திருப்பூரில் பரபரப்பு

சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொகைக்கான கால அவகாசமும், ஜப்தி போன்ற நடவடிக்கைக்கான முன் அறிவிப்புகளும் வீட்டின் முன்பு அறிவிப்பு ஓட்டுவதும் போன்ற பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில் அதனை எதையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் கந்துவட்டி போல் நடந்து கொண்ட இந்த கிளை இப்பகுதியில் பெரும் அவநம்பிக்கையை பெற்றுள்ளது. மேலும் வங்கியை இழுத்து மூடிவிட்டுச் செல்லுங்கள் என்று அப்பகுதி பொதுமக்கள் வங்கி மேலாளர் மற்றும் துணை மேலாளரை அடிக்காத குறையாக மிரட்டிய சம்பவமும் அரங்கேறியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios