சப் கலெக்டர் மகனுடன் சுதந்திர தின விழா: சிலாகித்த சின்னி ஜெயந்த்!
நடிகர் சின்னி ஜெயந்த், அவரது மகனும், உதவி ஆட்சியருமான ஸ்ருதன் ஜெய் உடன் இணைந்து சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்
பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய். யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75ஆவது இடத்தை பிடித்து வெற்றி பெற்ற ஸ்ருதன் ஜெய், மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றி வந்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு பணிகளுக்கு திரும்பிய ஸ்ருதன் ஜெய், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, தற்போது திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக அவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் எழுச்சியுடன் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியேற்றி உரையாற்றினார். அதேபோல், மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றி மரியாதை செய்தனர்.
‘வந்தேண்டா பால்காரி’... வருஷத்துக்கு ரூ.2 கோடி சம்பாதிக்கும் பெண்!
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட அட்சியர் தனது தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்சியில், திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து அவரது தந்தையும், நடிகருமான சின்னி ஜெயந்தும் திருப்பூர் மாவட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
உயர் அதிகாரிகளுக்கான இருக்கையில் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் அவரது தந்தை சின்னி ஜெயந்த் அமர்ந்திருந்து நிகழ்சிகளை கண்டு களித்தார். “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்” என்ற குறளுக்கிணங்க கற்றவர் அவையில் முதன்மை பெற்றிருந்த தன் மகனுடன் அவர் அமர்ந்திருந்தது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.