காலாவதியான மாத்திரையை சாப்பிட்ட மாணவி மயக்கம்; தாராபுரத்தில் பரபரப்பு
தாராபுரம் அருகே, காலாவதியான மாத்திரையை பயன்படுத்திய மாணவி மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள காளிபாளையத்தைச் சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 43). இவரது மனைவி சகிலாபானு (38). இவர்களின் 15 வயது மகள் தாராபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு கடந்த இரு தினங்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவியின் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து செல்லாமல், காளிபாளையத்தில் உள்ள மகேஷ் என்பவருக்கு சொந்தமான மருந்து கடையில் உடல் நிலையை கூறி மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி மாணவிக்கு மாலை 5 மணி அளவில் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட மாணவி சுமார் ஒரு மணி நேரத்தில் வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி உட்கொண்ட மருந்து பெட்டியை கண்ட மருத்துவர்கள் இந்த மருந்து கடந்த 2020ம் ஆண்டிலேயே காலாவதியான மருந்து எனக் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து காலாவதியான மருந்து மாத்திரைகள் விற்பனை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் பெற்றோர் மற்றும் காளிபாளையம் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.