நெல்லையில் மின்தடை நாளில் பழுது நீக்கிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி; உறவினர்கள் போராட்டம்
திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் முழு மின்தடை என்று அறிவிக்கப்பட்டு மின்சார பழுது நீக்க பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மணிகண்டன் என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், டவுண் கோட்டையடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டன் மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். நேற்று திருநெல்வேலி பழையபேட்டை மின் நுகர்வோர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முழு மின்தடை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் மின் கம்பத்தில் ஏறி மின்சாரப் பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மணிகண்டன் மின் கம்பத்தில் அமர்ந்திருந்த வாறே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த கங்கைகொண்டான் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் கம்பத்தில் உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்த மணிகண்டன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிகண்டன் இறப்புக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த மணிகண்டனின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
மருத்துவ மாணவியின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றிய உறவுக்கார பெண் கைது
முழு மின்தடை என்று அறிவிக்கப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்ற போது எப்படி திடீரென மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார்? அருகில் உள்ள தொழிற்சாலைகளில் மின்சார தேவைக்காக ஜெனரேட்டர் மற்றும் இதர மின்சாதன பொருட்கள் உரிய முன்னெச்சரிக்கை இல்லாமல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ள நிலையில் அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிர் இழந்த மணிகண்டனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கல்லூரி மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை முயற்சி; படுகாயங்களுடன் அனுமதி
இந்த விவகாரத்தில் அலட்சியமாக பணியாற்றியதாகக் கூறி இரண்டு மின்வாரிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.