Tirunelveli: நெல்லையில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக காவல்துறை அடக்குமுறை? தடியடியில் பலர் காயம்
திருநெல்வேலியில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுவதை எதிர்த்து தேவர்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்தில் தேவர்குளம், வன்னிக்கோனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்து தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீது மட்டும் பல்வேறு வழக்குகளை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பதிவு செய்வதாகவும், கடை வியாபாரிகளையும், வாகனம் வைத்திருப்பவர்களையும் குறி வைத்து பொய் வழக்குப் பதிவு செய்து தொழில் செய்ய விடாமல் பிரச்சினை செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனை கண்டித்து தேவர்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா அறிவித்திருந்தார். இதனை ஒட்டி வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை இசக்கி ராஜா தலைமையில் ஏராளமானோர் முற்றுகை போராட்டத்திற்கு வந்தபோது அவர்களை காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் திரளானோர் சங்கரன்கோவில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். போராட்டத்தின் தீவிரம் அதிகமானதால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
115 கோடியில் கட்டப்பட்ட பாலம்; மழைநீர் வடிய வழி இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
மேலும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.