தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய மைல்கல்லை எட்டிவருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 287 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 364 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு திரும்பியவர்கள். 

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் கண்டறிந்து பரிசோதனை செய்து அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவரும் அதே வேளையில், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பணியை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக இருந்த நிலையில், தேனியில் கொரோனாவால் 53 வயது பெண் உயிரிழந்துள்ளார். டெல்லி மாநாட்டிற்கு சென்றுவந்தவருக்கு கொரோனா இருந்த நிலையில், அவரிடமிருந்து அவருக்கு மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே மதுரையை சேர்ந்த 54 வயதான ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று காலை விழுப்புரத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இந்நிலையில் தேனியை சேர்ந்த ஒரு பெண்ணும் உயிரிழந்திருப்பதால், கொரோனா பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.