முதல்வன் பட அர்ஜூன் பாணியில் ஸ்பாட்டில் டிஸ்மிஸ் செய்த அமைச்சர்; அரசு மருத்துவமனையில் அதிரடி
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வின் போது பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஸ்கேன் செய்த கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் என்ற தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பரிசோதனை மையம் கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் (Krishna Diagnostics) பொது – தனியார் கூட்டில் (PPP Mode) ஒப்பந்தம் மூலம் நடந்து வந்தது.
அந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.2500 பெற்றுக் கொண்டு பரிசோதனை மேற்கொண்டதை அமைச்சர் தனது ஆய்வின் போது கண்டுபிடித்தார். உடனடியாக அதற்குரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இன்று ஒருநாளில் மட்டும் பரிசோதனைகள் மேற்கொண்ட 10 பேரில் 7 நபர்களிடம் தலா 2500 ரூபாய் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
விளையாட்டு துறையில் வருடத்திற்கு 100 பதக்கங்கள்; அதிகாரிகளுக்கு உதயநிதி கொடுத்த அசைன்மெண்ட்
இதனைத் தொடர்ந்து உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் நிறுவனம், பொது – தனியார் கூட்டில் (PPP Mode) செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார். தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலம் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் தருவிக்கவும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்கவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.