ஆட்டை உயிருடன் விழுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு..! பார்த்தவர்களை மிரள வைத்த காட்சி..!
தேனி அருகே ஆட்டினை உயிருடன் விழுங்கிக்கொண்டிருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே இருக்கிறது ஒட்டுக்களம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் முடியாண்டி. விவசாயியான இவர் ஏராளமான ஆடுகளை வைத்து தொழில் பார்த்து வருகிறார். தினமும் ஆடுகளை கிராமத்தில் இருக்கும் குளத்தின் கரையில் மேய விடுவது இவரது வழக்கமாம். சம்பவத்தன்றும் குளக்கரையில் ஆடுகளை முடியாண்டி மேய விட்டுள்ளார்.
பின்னர் மாலையில் ஆடுகளை கூட்டிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தான் ஆடுகளில் ஒன்று குறைவதை முடியாண்டி அறிந்தார். இதையடுத்து மீண்டும் குளக்கரைக்கு சென்று தேடியுள்ளார். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று ஆட்டினை உயிருடன் விழுங்கிக்கொண்டிருந்துள்ளது. அதைக்கண்டு செய்வதறியாது திகைத்த முடியாண்டி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
ஆட்டை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவலர்கள், வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் ஆட்டை விழுங்கிக்கிடந்த 15 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அது அடர்ந்த காட்டுப்பகுதிக்கு பலத்த பாதுகாப்புடன் சென்று விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மேலுமொரு வெளிமாநில மாணவி தற்கொலை..! விடுதி காப்பாளர் மீது தோழிகள் சரமாரி குற்றசாட்டு..!