பெரியகுளம் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓபிஎஸ் - தினகரன் தரப்பு மல்லுக்கட்டத் தொடங்கியிருக்கின்றன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பெரியகுளம் தொகுதியில் அரசியல் களம் சூடாகிவருகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்த டாக்டர் கதிர்காமுவும் ஒருவர். எனவே மக்களவை தேர்தலோடு பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியும் இடைத்தேர்தலைச் சந்திக்க உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் பெரியகுளம்தான். எனவே இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஓபிஎஸ் குறியாக இருக்கிறார். இதேபோல ஓபிஎஸ் சொந்த ஊரில் அவர் நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்க தினகரன் தரப்பும் காத்திருக்கிறது.
தினகரனோடு அணி சேர்ந்த கதிர்காமுவுக்கு கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் சீட்டு வாங்கிக் கொடுத்தது ஓபிஎஸ்தான். ஆனால், அவர் தினகரன் பக்கம் சாய்ந்ததால், அவரை எப்படியும் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார். சொந்த தொகுதியில் தோல்வியடைந்துவிட்டதால், அது அரசியல் ரீதியாக அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், மிகுந்த கவனத்தோடு இருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இதன் காரணமாகவே இடைத்தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் சில மாதங்களுக்கு முன்பு பெரியகுளம், ஆண்டிப்பட்டி தேர்தல் பொறுப்பாளராக தன்னை ஓபிஎஸ் நியமித்துக்கொண்டார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
தினகரனுக்கும் இந்தத் தொகுதி மிகவும் பரிட்சயமானதுதான். ஏற்கனவே இவர் இங்கே எம்.பி.யாக இருந்ததால், அவருக்கும் கணிசமான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். தினகரன் தரப்பில் பதவி இழந்த டாக்டர் கதிர்காமு மீண்டும் போட்டியிட உள்ளார். தினகரன் தரப்பில் இப்போதே ஆதரவாளர்களைச் சந்திக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திண்ணைப் பிரசாரமும் செய்ய திட்டமிட்டுள்ளனர். தினகரன் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் என்பதால், அவரை எதிர்கொள்ள வசதியாக வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் தீவிர கவனம் செலுத்திவருவதாக தேனி மாவட்ட அதிமுகவினர் சொல்கிறார்கள். 
பெரியகுளத்தில் போட்டியிட  ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது மகன் ரவீந்திரநாத்தையும் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து சீட்டு கேட்டு நச்சரித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவையும் பார்த்து அதிமுகவினர் சீட்டு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பெரியகுளம் தொகுதியின் களம் ஓபிஎஸ்-தினகரன் தரப்பால் சூடேறிவருகிறது.