தேனி அருகே கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் அடுத்த கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருக்கும் மாலதி (24) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரிணி, ஹரிகரன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் ஈஸ்வரன் கடந்த சில வருடங்களாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அடிக்கடி அவரது சென்று உல்லாசமாக இருந்து வருவது மனைவிக்கு தெரியவந்தது. 

இது தொடர்பாக மனைவி கணவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால், எவ்வளவு சொல்லியும் ஈஸ்வரன் தனது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனையடுத்து, மனமுடைந்த மாலதி வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர் அளித்த புகாரின்பேரில் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.