Asianet News TamilAsianet News Tamil

தேனியில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்!

தேனியில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

Grievance meeting held for transgenders in Theni
Author
First Published Jul 9, 2023, 2:10 PM IST

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அறிவுரையின்படி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமையில், மாவட்ட சமூக நலன் அலுவலர் சியாமளா  முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெற்றது.

திருநங்கைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்திட மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் குறைதீர்க்கும் முகாம் நடத்திட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் 22 திருநங்கைகள் கலந்து கொண்டனர். அவர்களில் வீட்டு மனை வேண்டி 9 நபர்களும், காவல்துறையில் பணி வேண்டி ஒரு நபரும், காப்பீடு திட்ட அட்டை வேண்டி 8 நபர்களும் மற்றும் குடும்ப அட்டை வேண்டி ஒரு நபரும் மனு அளித்துள்ளனர். இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும், இம்முகாமில் 40 வயதிற்கு மேற்பட்ட தேனி மற்றும் பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த தலா 2 திருநங்கைகளுக்கும், ஆண்டிபட்டி தாலுகாவை சேர்ந்த 3 திருநங்கைகளுக்கும், உத்தமபாளையம் தாலுகாவை சேர்ந்த 1 திருநங்கைக்கும் ஆக மொத்தம் 8 திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1500/- ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

தேனியை பொறுத்தவரை, சமூக நலத்துறையின் சார்பில் இதுவரை 99  திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 40 வயதிற்கு மேற்பட்ட 12 திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. சுய தொழில் மேற்கொள்ள 21 திருநங்கைகளுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 45 திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், 5 திருநங்கைகளுக்கு சுய தொழில் மேற்கொள்ள தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios