அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மோதல்; காவல் நிலையம் சூறையாடல், போக்குவரத்து நிறுத்தம்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் காவல் நிலையம் சூறையாடப்பட்டதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு கட்சியினர், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெரியகுளம் நகரின் மையப் பகுதியில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடைசி நிகழ்ச்சியாக பட்டாளம்மன் கோவில் தெரு இளைஞர்களும், T.கல்லுப்பட்டி இளைஞர்களும் தீச்சட்டி மற்றும் மேளதாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தனர். அப்போது திடீரென அந்த இரண்டு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சேர் மற்றும் இருசக்கர வாகனங்களை அடிதடியில் ஈடுபட்டோர் அடித்து நொறுக்கினார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை இளைஞர்கள் விரட்டியடித்தனர். மேலும் காவல் நிலையம் வரை துரத்திச் சென்று காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், காவல் நிலையத்திற்கு உள்ளும், அங்கிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீதும் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் ஆய்வாளரின் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் உடைக்கப்பட்டன. மோதலில் ஈடுபட்டவர்கள் தேனி - திண்டுக்கல் சாலையில் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம், மற்றும் அரசுப் பேருந்தின் கண்ணாடிகளையும் கற்களை வீசி உடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலவரத்தை அடக்க முயன்ற போது, அவர்கள் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் காவல் ஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட எட்டு காவல்துறையினர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் விரைந்து வந்தார். மேலும் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பெரியகுளம் சார் ஆட்சியர் சிந்து உள்ளிட்ட வருவாய் துறை எனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
நேற்று நள்ளிரவு காவல்துறை தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.அபிநவ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.மேலும் தேனி திண்டுக்கல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
நேற்று நள்ளிரவில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணிகளும் தொடங்கின.முதல் கட்டமாக நேற்று நள்ளிரவு 65க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,இந்த கலவரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக ஆர்டிஓ அறிக்கை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைவரையும் கைது செய்ய தென்மண்டல ஐஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
அனுமார்கோவில் தெரு, நேரு நகர்,பட்டாளம்மன் கோவில் தெரு T.கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து இன்று கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.இதனால் பதற்றத்தை தணிக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் பெரியகுளம் வழியாக போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அப்பகுதியில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.