புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலைய திறப்பு விழா; கார்த்தி சிதம்பரத்தை பேசவிடாமல் ஜெய் ஸ்ரீ ராம் முழங்கிய பாஜகவினர்
புதுப்பிக்கப்பட்ட காரைக்குடி ரயில் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை பேசவிடாமல் பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில்வே நிலையத்தை பாரத பிரதமரின் அம்ரித் பாரத் ரயில் நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ், புதிய வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயணிகளுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறை, மேம்பால நடைபாதை, மின் தூக்கிகள், பயணிகள் இருக்கை, நவீன கேமராக்கள், பயணிகள் அறிவிப்பு பதாகை போன்றவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வசதிகள் கொண்ட ரயில்நிலைய திறப்பு விழா இன்று காரைக்குடியில் நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இந்த புதிய கட்டிடங்களை திறந்து வைத்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வந்திருந்தார்.
அங்கு கார்த்திக் சிதம்பரத்திற்கும், பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கார்த்திக் சிதம்பரம் மேடையில் ஏறி பேசும் போது, அரசியல் பேசக்கூடாது என பாஜகவினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி, மாறி காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.