துணை ராணுவ உதவியுடன் கண்டதேவி கோயில் தேரை ஓட வைக்கவா? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் தேரோட்டத்தை துணை ராணுவத்தின் உதவியோடு ஓட வைக்கவா என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனி மாதத்தில் நடக்கக்கூடிய திருவிழாவை ஒட்டி தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த கோயிலுக்கு புதிய தேர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தேரோட்டம் நடைபெறாமல் இருக்கிறது. இதுதொடர்பாக 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், தேரோட்டம் நடத்த ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனாலும், தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர் தயாராக இருக்கிறது. ஆனால் அங்கு பல்வேறு பிரிவினர்கள் இடையே பிரச்சனைகள் இருப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை: பிரதமர் மோடி பெருமிதம்!
இதனை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பல பிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்ற சூழல் வருத்தத்திற்குரியது என்றது. அனைத்து பிரிவு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தொடர்ந்து, பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி, கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை மாநில அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அத்துடன், தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து நவம்பர் 17ஆம் தேதி முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.