41 நாட்களுக்கு பிறகு சரியும் நீர்மட்டம்..! மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு..!
மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழையின் தீவிரம் அதிகமாகவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை கடந்த செப்டம்பர் மாதம் எட்டியது. அதன்பிறகு மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பியது. இந்த வருடம் மட்டும் மேட்டூர் 4 முறை நிரம்பியுள்ளது.
முதன்முறையாக நிரம்பிய போது 15 நாட்களும், இரண்டாம் முறை 6 நாட்களும், அதன்பிறகு 16 நாட்களும் 120 அடியில் நீடித்தது. நான்காவது முறை நிரப்பிய பிறகு 42 நாட்கள் 120 அடியில் அணையின் நீர்மட்டம் இருந்தது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 79 நாட்கள் அணையின் நீர்மட்டம் உச்சத்தில் இருந்துவந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக திறக்கப்படவில்லை.
அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 3 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் 3900 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணை நீர்மட்டத்தின் அளவு சரிய தொடங்கியுள்ளது. 120 அடியில் நீடித்து வந்த நீர்மட்டம் 41 நாட்களுக்கு பிறகு 119.74 ஆக குறைந்துள்ளது.