சேலத்தில் சாமியாடி அருள் வாக்கு கூறிய பெண்ணின் பேச்சை நம்பி, 10 ஆண்டுகளுக்கு முன் வீசப்பட்ட அம்மன் சிலையை 15 நாட்களாக அப்பகுதி மக்கள் தேடிவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பழமையான அம்மன் கோயில் ஒன்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கோயில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த பழைய அம்மன் சிலையை பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வீசிவிட்டு, அவினாசியிலிருந்து புதிய சிலை கொண்டுவந்து பிரதிஷ்டை செய்துள்ளனர். 

இந்த நிலையில் கடும் கோடை வெயிலில் அவதிப்பட்ட ஒட்டப்பட்டி மக்கள் செல்லாண்டி அம்மனிடம் மழை வேண்டி பூஜை செய்தனர். அப்போது அருள் வந்து சாமி ஆடிய பெண் ஒருவர், அம்மனுடைய சிலை காவிரி ஆற்றில் கிடப்பதாகவும், அதனை எடுத்து வந்து பூஜை செய்தால்தான் ஊரில் மழை பொழியும் அதுவரை மழை பொழிய வாய்ப்பில்லை என்றும் அருள் வாக்கு கூறியுள்ளார். 

இதனை வேதவாக்காக நினைத்து காவிரி ஆற்றில் 10 வருடத்துக்கு முன்பு வீசிய அம்மன் கல் சிலையை அப்பகுதி மக்கள் பூலாம்பட்டி காவிரியாற்றில் மீனவர்கள் உதவியோடு கடந்த 15 நாட்களாக சிலையைத் தேடி வருகின்றனர். சிலை கிடைக்காததால் தூத்துக்குடியிலிருந்து முத்துக்குளிக்கும் வீரர்களை வரவழைத்துச் சிலை தேடும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். 

சிலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த கிராமத்தினர், ஒரு கட்டத்தில் சாமி ஆடிய பெண்ணை காவிரி ஆற்றின் கரைக்கு அழைத்து வந்து சிலை கிடக்கும் இடத்தில் எலுமிச்சை பழத்தை வீசி அடையாளம் காட்டும் படி கேட்டனர். சிலை கிடைப்பதற்கு பதிலாக சாமியாடிய பெண்ணுக்கு போட்டியாக மற்றொரு ஆண் ஒருவர், மூச்சை வேகமாக இழுத்து விட்டபடி சாமி ஆட தொடங்கினார். அவரும் போட்டிக்கு அருள் வாக்கு கூறியதால் குழப்பம் ஏற்பட்டது.