இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நேற்று 54 பேருக்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் சுகாதரத்துறையினர் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே சேலம் மாவட்டதில் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்கு மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25.04.2020(சனிக்கிழமை) மற்றும் 26.04.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. மேற்கண்ட நாட்களில் அனைத்து வகையான கடைகள், சந்தைகள் உள்ளிட்டவைகளை முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

விதிகளை மீறி இரு நாட்களிலும் கடைகளை திறந்து வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தேவையின்றி வாகனங்களில் வெளியில் வருபவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு 2ன் கீழ் காவல்துறையின் மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்றவை வழக்கம் போல செயல்படும்.