சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் பயணிகள் நிறைந்து இருந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருக்கும் முத்தம்பட்டி இணைப்பு சாலை அருகே பேருந்து வந்துள்ளது.

அப்போது வாழப்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து வந்திருக்கிறது. முத்தம்பட்டி இணைப்பு சாலையில் இருந்து மெயின் ரோட்டிற்கு தனியார் பேருந்து வந்த போது, அதே நேரத்தில் எதிரே சேலத்தில் இருந்து வந்த அரசு பேருந்தும் வந்துள்ளது. இரண்டும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் தனியார் பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. 

இந்த விபத்தில் இரு பேருந்திலும் பயணம் செய்த 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் கவலைகிடமாக இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.